இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து லுங்கி இங்கிடி விலகல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி போட்டி நாளை ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி டர்பனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி கிங்ஸ்மீத்திலும் நடைபெற்றவுள்ளது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணியானது பகிஸ்தான் அணியுடன் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 10ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 17ஆம் தேதி முதலும், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதலும் என தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடர்களுக்காக தென் ஆப்பிரிக்க அணியும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே தென் ஆப்பிரிக்க அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிவரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தென் ஆப்பிரிக்க அணியானது இனிவரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அந்த அணியின் முக்கிக வேகப்பந்து வீச்சாளர் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் லுங்கி இங்கிடி சொந்த மண்ணில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா தனது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், அவருக்கான உடற்தகுதி தேர்வு நவம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக காயம் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டெம்பா பவுமா முழுமையாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.