பையோ பபுள் வீரர்களின் ஒற்றுமையை அதிகரித்துள்ளது - ஷிகர் தவான்
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி நாளை தனி விமானம் மூலம் இலங்கை செல்லவுள்ளது.
அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இலங்கை செல்வதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஷிகர் தவான்,“ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு எங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட சில நாள்கள் கிடைத்தன.
அதன்பின் இலங்கை தொடருக்காக நாங்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டோம். இந்த அணியில் அனுபவ மற்றும் அறிமுக வீரர்கள் என அனைவரும் கலந்திருந்தனர். இதனால் அனுபவ வீரர்கள் தங்களது அனுபவங்களை இளம் வீரர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இந்த பையோ பபுள் சூழல் அமைந்தது” என்று தெரிவித்தார்.
அதன்பின் பேசிய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “டி 20 உலகக் கோப்பைக்கு முன் இந்த மூன்று டி20 போட்டிகள் மட்டுமே உள்ளன. அதனால் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வீரர்கள் மீது தேர்வாளர்களின் முழு கவனமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை ஒன்று அல்லது இருவருக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். அதனால் இத்தொடரை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.