டி20 உலகக்கோப்பை : புதிய பயிற்சியாளரை அணியில் இணைத்த நியூசிலாந்து!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன், காலின் முன்ரோ ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. இதே அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான ஷேன் பாண்ட், ஐபிஎல் போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று பணியாற்றவுள்ளார்.
அதனால் அவருடைய அனுபவம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு உதவியாக இருக்கும் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் நியூசிலாந்து அணியுடன் இணைந்து ஷேன் பாண்ட் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.