பார்டர்-கவாஸ்கர் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் இருக்கும் - மிட்செல் ஸ்டார்க்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை போல பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவும் சமமான சவாலை கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இப்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக இருப்பதால், இது ஆஷஸ் தொடருக்கு இணையாக இருக்கலாம். நாங்கள் எப்போதும் சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற விரும்புகிறோம், இந்தியா மிகவும் வலுவான அணி என்பதை நாங்கள் அறிவோம்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதல் இரண்டு அணிகளாக நாங்கள் இருக்கிறோம். எனவே ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் நிச்சயமாக மிகவும் உற்சாகமான தொடராக இது இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இத்தொடரின் கடைசி போட்டி முடிவடையும் ஜனவரி 8 ஆம் தேதி நாங்கள் அங்கு அமர்ந்திருக்கும்போது, பார்டர்-கவாஸ்கர் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என்று மிட்செல் ஸ்டார்க் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.