இருவரையும் நீக்கிட்டு இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - கவாஸ்கர் காட்டம்!

Updated: Fri, Jan 14 2022 17:27 IST
Image Source: Google

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே. புஜாரா 3ஆம் வரிசையிலும், ரஹானே 5ஆம் வரிசையிலும் விளையாடி இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலுசேர்த்திருக்கின்றனர். புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக இந்திய அணிக்காக அபாரமாக ஆடி பல வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் படுமோசமாக விளையாடி சொதப்பிவருகின்றனர். அவர்கள் இருவரின் பங்களிப்பு பெரியளவில் இல்லாமலேயே இந்திய அணி வெற்றிகளை குவித்துவருகிறது. ஆனாலும் மற்ற வீரர்கள் ஆடாத சமயத்தில் இவர்கள் ஆடியாக வேண்டிய கட்டாயம் உருவாகும்போதும் இவர்கள் சொதப்புவது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாகவே சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் படுமோசமாக சொதப்பும் அதேவேளையில், ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் அபாரமாக ஆடி பெரிய ஸ்கோர் செய்துவருகின்றனர். எனவே புஜாரா, ரஹானே மீதான அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வந்தது. 

ஆனால் அதையும் மீறி, அவர்களது அனுபவம் மற்றும் கடந்த கால பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவர்களுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றனர். கேப்டவுனில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்புதான் கிட்டத்தட்ட கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது.

ஆனால் அதை உறுதியாகவே தங்களது கடைசி வாய்ப்பாக உருவாக்கிக்கொண்டனர் அவர்கள். கேப்டவுனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டில் புஜாரா முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 9 ரன்களும் அடித்தார். ரஹானே முதல் இன்னிங்ஸில் 9 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் ஒரு ரன்னும் அடித்தார்.

புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டன. எனவே இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், “ரஹானேவை அணியிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை சேர்க்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடி சதமடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதுமாக நன்றாக ஆடி ஸ்கோர் செய்தார். 

ரஹானே மட்டுமல்ல; புஜாராவையும் நீக்க வேண்டும். என்னை பொறுத்தமட்டில் இந்திய டெஸ்ட் அணியின் ஆடும் லெவனில் 2 இடங்கள் காலியாக உள்ளன. ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் சேர்க்கப்பட வேண்டும். 

விஹாரி - ஸ்ரேயாஸ் ஆகிய இருவரில் யார் 3ஆம் வரிசையில் இறங்குவார் என்பதை பார்க்க வேண்டும். விஹாரி 3ஆம் வரிசையிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 5ஆம் வரிசையிலும் ஆடலாம். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை