ஐபிஎல் 2022: ரோஹித் குறித்து பேசிய ஜெயவர்த்னே!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியிடன் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மும்பை அணி நிர்ணயித்த 156 என்ற இலக்கை கடைசி நேர அதிரடியால் தோனி எட்டிப்பிடித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 10 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அது நடக்காமல் போனதற்கு ஓப்பனிங் வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் டக் அவுட் ஆனது தான்.
கடந்த சில போட்டிகளாகவே இவர்கள் இருவரும் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 114 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ரோகித் சர்மா முதலில் சில அதிரடிகளை காட்டினால், நிச்சயம் அரைசதம் வரை குவிப்பார். இதுதான் வழக்கம். ஆனால் இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறுகையில், “முதல் சில போட்டிகளில் இஷான் கிஷான் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் சரிந்துவிட்டார். ரோஹித் சர்மா பந்துகளை சரியாக கவனித்து ஆடுகிறார். முதல் 15 - 20 ரன்களை அடிக்கிறார். ஆனால் பதற்றத்தின் காரணமாக அதனை கொண்டுச்செல்ல முடியவில்லை.
வெகு சீக்கிரமாக அவுட்டானால், நமக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை எனத்தோன்றும். ஒரு பேட்ஸ்மேனாக இது கிரிக்கெட்டில் சகஜம் தான். என்னைப்பொறுத்தவரை ரோஹித் மற்றும் இஷான் கிஷான் நம்பிக்கையை அதிகரிக்க தயாராக வேண்டும் என நினைப்பதாக” கூறியுள்ளார்.