இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்தது அல்ல - ரோஹித் சர்மா!
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத் தடுமாறி வென்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ''நிச்சயமாக இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததுபோல் எளிமையாக அமையவில்லை. இருப்பினும் இந்த அனுபவத்தின் மூலம் வீரர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதாவது எதைச் செய்வது அவசியம், எல்லா நேரத்திலும் பவர் ஹிட்டிங் ஷாட்களை அடிக்கக் கூடாது போன்றவற்றைப் புரிந்துகொள்ள இயலும்.
கேப்டனாக, அணியாக, வீரர்கள் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி. எங்களுக்குச் சிறந்த போட்டியாக இருந்தது. சில முக்கியமான வீரர்கள் இல்லை. நியூஸிலாந்து அணி 180 ரன்களைக் கடந்து செல்லும் என எதிர்பார்த்த நிலையில் அதை 165 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட்டோம்.
இதற்கு நிச்சயமாக இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சுதான் கராணம். சூர்யகுமார் யாதவ் நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாகச் செயல்பட்டார், சுழற்பந்துவீச்சை எளிதாக கையாண்டார்.
Also Read: T20 World Cup 2021
நான் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது என்பது என்னுடைய பலவீனத்தை போல்ட் நன்கு புரிந்துள்ளார். அவரின் வலிமையை நான் அறிவேன்'' என்று தெரிவித்தார்.