டி20 உலகக்கோப்பை: அரையிறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிசெய்த நியூசிலாந்து!
டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 1-இல் முக்கியமான போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சனை 8 ரன்னுக்கு வீழ்த்தினார் கசுன் ரஜிதா. 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறிய நிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு கிளென் ஃபிலிப்ஸ் - டேரைல் மிட்செல் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். டேரைல் மிட்செல் 22 ரன்களுக்கும், ஜிம்மி நீஷம் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து விளையாடி சதமடித்த கிளென் ஃபிலிப்ஸ் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை கரைசேர்த்தார். அதிரடியாக ஆடி சதமடித்த ஃபிலிப்ஸ் 64 பந்தில் 104 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். டி20 உலக கோப்பையில் பிரண்டன் மெக்கல்லமிற்கு பிறகு சதமடித்த 2ஆவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் க்ளென் ஃபிலிப்ஸ். க்ளென் ஃபிலிப்ஸின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 167 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.
அதன்பி 168 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் நிஷங்கா 0, குசல் மெண்டிஸ் 4, தனஞ்ஜெயா 0, அசலங்கா 4, கருரத்ணே 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து கேப்டன் சனகா - ராஜபக்சா ஜோடி சிறுது நேரம் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். ராஜபக்சா 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹசரங்கா 4, திக்ஷனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 65 ரன்னில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி 93 ரன்னில் 9-வது விக்கெட்டை பறிகொடுத்தது. சனகா 35 ரன்னில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதிப்படுத்தி விட்டது.