அசுர வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவை பாராட்டிய ஆஸி ஜாம்பவான்!

Updated: Sun, Mar 31 2024 13:57 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களை கடந்தது.  இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரும் மயங்க் யாதவ் வேகத்தில் வீழ்ந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்த்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மயங்க் யாதவ் ஆட்டநயனன் விருதை வென்றார். மேலும் தனது அறிமுக போட்டியில் 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசிய மயங்க் யாதவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துவீச்சாகவும் இது பதிவானது. அதுமட்டுமின்றி தொடர்ந்து அதிவேகமாக பந்துவீசிய அவர் இப்போட்டியில் சராசரியாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி பேட்டர்களை நிலைகுழைய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ தனது எக்ஸ் தளத்தில் மயங்க் யாதவை பாராட்டிய பதிவு வைரலாகியுள்ளது. மயங்க் யாதவ் குறித்து பிரெட் லீ தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியவராக உள்ளார்” என பதிவிட்டு கைத்தட்டல் எமோஜியையும் பதிவிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை