ஹைதராபாத் அணி வீரர்களை விளாசும் பிரையன் லாரா!
ஐபிஎல் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், லக்னோ, சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளை பெற்றிருப்பதால், இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.
புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இந்த சீசனில் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லை. பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன் என மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களை பயிற்சியாளர்களாக பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் படுமோசமாக அமைந்துள்ளது. ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ரூக், அபிஷேக் ஷர்மா என சிறந்த வீரர்களை கொண்ட நல்ல பேட்டிங் அணியாகத்தான் உள்ளது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அவர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததுதான் பெரிய பிரச்னை. சன்ரைசர்ஸ் பவுலர்கள் புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், டி.நடராஜன் ஆகியோர் அவர்களது பணியை செவ்வனே செய்துவருகின்றனர்.
ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் சொதப்புகின்றனர். அந்த அணி 10 போட்டிகளில் விளையாடியும் இதுவரை தொடக்க ஜோடியை கூட உறுதிப்படுத்த முடியவில்லை. மயன்க் அகர்வால் - அபிஷேக் ஷர்மா, அபிஷேக் ஷர்மா - ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால் - ஹாரி ப்ரூக் என தொடக்க ஜோடியை மாற்றி மாற்றி இறக்கியும் எதுவும் பலனளிக்கவில்லை. கடைசி வாய்ப்பாக கேகேஆருக்கு எதிரான போட்டிதான் இருந்தது. ஆனால் அந்த போட்டியிலும் ஹோம் கிரவுண்டில் 172 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது.
அதனால் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கும் பேட்டிங் பயிற்சியாளர் பிரயன் லாரா, அவர்களை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரையன் லாரா, “பவர்ப்ளேயில் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை இழந்துவருகிறோம். அதுதான் பெரும் பின்னடைவாக இருக்கிறது. கிளாசன் அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார். 6ம் வரிசையில் இறங்கி கிளாசன் அசத்துகிறார். அவருக்கு மேல் 5 தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பேட்டிங்கிற்கு சாதகமான டிராக்கில் பேட்ஸ்மேன்கள் முன்வந்து பொறுப்பை ஏற்று சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். பார்ட்னர்ஷிப்புகள் அவசியம். ஆட்டத்தின் போக்கிற்கேற்ப பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடவேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.