பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோஷ் பிரௌன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆம் வரிசையில் களமிறங்குய மார்னஸ் லபுசாக்னே 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் ஹாரி கான்வே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டன் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் - கிறிஸ் லின் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 39 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும், 22 ரன்களில் கிறிஸ் லின்னும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரியும் 2 ரன்களோடு நடையைக் கட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஆடம் ஹோஸ் 19, காலின் டி கிராண்ட்ஹொம் 21 என நடையைக் கட்ட பின்னர் வந்த வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.