ஐசிசி மாதாந்திர விருதுகள்: டிசம்பர் மாதத்திற்கான விருதை வென்ற பும்ரா, சதர்லேண்ட்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் டேன் பேட்டர்சன் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
அதேபோல் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர்த்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தனது அபார பந்துவீச்சின் மூலம் அணியின் வெற்றிக்கு உதவிய தென் ஆப்பிரிக்க அணியின் டேன் பேட்டர்சன் இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக ஜஸ்பிரித் பும்ரா இந்த விருதை வென்றுள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் நோன்குலுலேகோ ம்லபா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்ட் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சதமடித்து அசத்தியதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் அனபெல் சதர்லேண்டிற்கும் இந்த விருது கிடைத்துள்ளது. மேலும் அனபெல் சதர்லேண்ட் கைப்பற்றும் இரண்டாவது ஐசிசி மாதாந்திர விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவ்விரு வீரர்களுக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.