ஐபிஎல் மினி ஏலம்: இவ்வளவு கோடிக்கு என்னை தேர்வு செய்ததை என்னால் நம்ப முடியவில்லை - கேமரூன் க்ரீன்!

Updated: Fri, Dec 23 2022 21:40 IST
Cameron Green after Mumbai Indians’ Rs 17.5 crore bid – ‘Can’t wait to get started’ (Image Source: Google)

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பார்கள் என கருதப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தின் சாம் கரண் மற்றும் ஆஸ்திரேலியா இளம் வீரர் கேமரூன் கிரீன் ஆகியோர் மீது அதிக எதிர்பார்புகள் நிலவி வந்தது.

அதற்கேற்ப சுட்டி குழந்தையான சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. மும்பை வரலாற்றில், ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை கொடுத்து வாங்கி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து கேமரூன் கிரீன் கூறுகையில், “ஐபிஎல் மினி ஏலத்தில் நான் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட போது, இது கனவா அல்லது நிஜமா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல் முதல்முறையாக எனக்காக ஐபிஎல் ஏலத்தை பார்த்தது வித்தியாசமாக இருந்தது.

ஐபிஎல் ஏலத்தில் என் பெயரை சொன்ன போது, என் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு அணியும் எனக்காக ஏலம் கேட்ட போது, நடுக்கம் அதிகரித்து கொண்டே போனது. கடைசியாக மும்பை அணி என்னை வாங்கியதாக அறிவிக்கப்பட்ட பின்னரே, எனது நடுக்கம் குறைந்தது. எப்போதும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரசிகன். ஒவ்வொரு ஆண்டிலும் ஐபிஎல் தொடரை பின் தொடர்ந்து வருகிறேன்.

இப்போது ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் தொடரின் மிக முக்கிய அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணியுடன் இணைவதில் பெருமையாக இருக்கிறது. எப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை