ஷுப்மன் கில் கேட்ச்சில் எனக்கு எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை - கேமரூன் க்ரீன்!
நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 173 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 123 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று ஆரம்பத்திலேயே லபுசாக்னே 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அடுத்ததாக மிச்சல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர். ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலையை கடந்தது. அதன் பிறகு ஸ்டார்க் 41 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் அடித்து எட்டு விக்கெட் இழந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி அத்துடன் டிக்ளர் செய்தது. மொத்தமாக 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து, 444 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் அடித்திருந்தது. அந்த நேரத்தில் ஷுப்மன் கில் போலன்ட் பந்தை எதிர்கொண்டபோது, பந்து எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் நின்ற கேமரூன் கிரீன் பிடித்தார்.
ஆனால், பந்து தரையில் பட்டதுபோல் இருந்ததால், நடுவர் மூன்றாவது நடுவருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஆராய்ந்த நடுவர், பந்து தரையில் பட்டதுபோல் தெரிந்தபோதும், உடனே அவுட் என தீர்ப்பு வழங்கினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்த கேட்ச் குறித்து பேசிய கேமரூன் க்ரீன், “ஷுப்மன் கில் கொடுத்த கேட்சை பிடித்த தருணத்தில் அந்த கேட்சை நான் சரியாகத் தான் பிடித்தேன் என்று நினைக்கிறன். அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை. அதன் பின்னர் இந்த கேட்ச் முடிவை மூன்றாவது நடுவரிடம் விட்டு விட்டோம். அவரே இந்த கேட்சை சரி என்று ஒப்புக்கொண்டு அவுட் கொடுத்து விட்டார்” என கூறியுள்ளார்.