ஒற்றை கையில் கேட்ச் பிடித்த கேமரூன் க்ரீன் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் கேமரூன் க்ரீன், முகமது சிராஜ், கரண் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் நிதானம் காட்ட, மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசித் தள்ளினார். இதில் அபாரமாக விளையாடி வந்த பில் சால்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்துகளில் 7 விக்கெட், 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சுனில் நரைனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் கேகேஆர் அணி 97 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இப்போட்டியின் போது ஆர்சிபி அணி வீரர் கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச் ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தவகையில் இப்போட்டியில் யாஷ் தயாள் வீசிய பவர்பிளேவின் கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அங்கிரிஷ் ரகுவன்ஷி அதனை பவுண்டரி அடிக்கும் முயற்சியில் ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேமரூன் க்ரீன் தலைக்கு மேல் சென்ற பந்தை ஒற்றைக்கையில் எட்டிப்பிடித்து அசத்தினார். இந்நிலையில் கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச்சின் காணொளியானது வைரலாகியுள்ளது.