SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

Updated: Mon, Jul 03 2023 22:28 IST
Captain Chamari Athapaththu’s unbeaten 140 to lead Sri Lanka to their first-ever ODI series victory (Image Source: Google)

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் இலங்கையும், மற்றொன்றில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கலேவில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னடைன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மெலி கெரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூஸி பேட்ஸ் - சோஃபி டிவைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்தார். பின் 31 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் நீண்ட நேர மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 29 ஓவர்கலில் 196 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹர்ஷித்தாவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் சமாரி அத்தபத்துவுடன் ஜோடி சேர்ந்த நிலாக்‌ஷி டி சில்வா விக்கெட் இழப்பை தடுத்தார்.

அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய சமாரி அத்தபத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 140 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அவருடன் விளையாடிய நிலாக்‌ஷி 48 ரன்களைச் சேர்த்திருந்தார். 

இதன்மூலம் இலங்கை அணி 26.5 ஓவர்களில் இலக்கை ஏட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சதமடித்தது மட்டுமில்லாமல், இத்தொடர் முழுவது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சமாரி அத்தபத்து ஆட்டநாயகியாவும், தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை