ஆஸ்வின் தொடர்ந்து நிராகரிக்கப்பட காரணம் என்ன? - நிக் காம்ப்டன்!
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேசமயம், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய அணி ஏறத்தாழ வெளியேறிவிட்டது.
இந்திய அணிக்கு கிடைத்த அதிர்ச்சி தோல்வி குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலரும் ட்விட்டரில் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் வைத்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற லேசான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. ஆனால், கடந்த இரு போட்டிகளில் இந்திய அணி விளையாடியதைப் பார்க்கும்போது, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற ஏதாவது அதிசயம் நடக்க வேண்டும்.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் அலி, “இந்திய அணி கடந்த 2 போட்டிகளிலும் விளையாடியது அவர்களுக்கு அழகல்ல.ஆனால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்திய அணி இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். இந்திய அணி தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டால் உலகக் கோப்பை சிறப்பாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சோயப் அக்தர் கூறுகையில், “இந்திய அணியிடம் இருந்து மோசமான ஆட்டம் வெளிப்பட்டுள்ளது. வலிமையான, திறமையான ஆட்டத்தை நான் இந்திய அணியிடம் இருந்து எதிர்பார்த்தேன். ஆனால், நேற்றிரவு நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தது. ஏன் என எனக்குத் தெரியவில்லை.
ஏன் இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறக்கினீர்கள். ஹர்திக் பாண்டியாவை கடைசி ஏன் பந்துவீசச் செய்தீர்கள். அவர் முன்கூட்டியை பந்துவீசச் செய்திருக்கலாம். இந்திய அணி மொத்தத்தில் மோசமான கிரிக்கெட்டை விளையாடியது. அதிகமான அழுத்தத்தில் இந்திய அணியினர் இருந்தனர்.
இந்திய அணியினர் எந்தக் கொள்கையை பின்பற்றினார்கள், என்ன திட்டத்தை பின்பற்றினார்கள் என எனக்குத் தெரியவில்லை. அணித் தேர்வில் தோல்வி. திட்டமிடல் இல்லை. ஒவ்வொருவரும் பதற்றத்தை அனுபவித்துள்ளனர். கோலி தனது 3-வது இடத்திலிருந்து பேட் செய்யவில்லை. ரோஹித்தும் ஆட்டத்தை தொடங்கவில்லை”என்று தெரிவித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கூறுகையில், “ரவிச்சந்திரன் அஸ்வினுடன் கேப்டன் கோலிக்கு அப்படி என்ன கடினமான உறவு இருக்கிறது. இந்திய அணியிலிருந்து அஸ்வின் ஒதுக்கிவைக்கப்பட எப்படி அனுமதிக்கப்படுகிறார். கேப்டனுக்கு இவ்வாறு சர்வாதிகாரம் அனுமதிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.