அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியானது கேப்டன் ஆன்ட்ரே ஃபிளெட்சர், ரைலீ ரூஸோவ் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆன்ட்ரே ஃபிளெட்சர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், ரைலீ ரூஸோவ் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்தனர். செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்த நிலையில், முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 62 ரன்களில் ஃபாஃப் டூ பிளெசிஸும், 74 ரன்களில் ஜான்சன் சார்லஸும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் நேவிஸ் பேட்ரியாட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்கினை வகித்த செயின்ட் லூசியா கிங்ஸ் வீரர் ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வீரர் சாத்ராக் டெஸ்கார்ட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது தற்சமயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி, லூசியா கிங்ஸ் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் வீசிய இன்னிங்ஸின் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட மைக்கைல் லூயிஸ் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பந்தை தூக்கி அடித்தார். ஆனால் பந்தை அவர் சரியாக அடிக்காத காரணத்தால், அது பவுண்டரியை நோக்கி சென்ற நிலையில், அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சாத்ராக் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.