இத்தொடரில் நாங்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்று நம்புகிறோம் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியினாது முடிவு எட்டப்படாமல் ரத்து செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 4 புள்ளிகளைப் பெற்றதுடன், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டி முடிவின் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “இப்போட்டிக்கு முன்னதாக இதில் வெற்றிபெற்று நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவது குறித்து அதிகம் ஆலோசித்தோம். அதற்கேற்றவாறு எங்கள் அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை கட்டுப்படுத்தினர். அவர்களை 270 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது நல்லது, மேலும் இப்போட்டியில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம்.
அதன்பின் பேட்டிங்கிலும் நாங்கள் அதிரடியாக தொடங்கினோம். இது ஒரு நல்ல செயல்திறன், ஆனால் இப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் விளையாட கொஞ்சம் சிரமப்பட்டார், இருப்பினும் சில நாள்களுக்குள் அவர் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். மறுபக்கம் டிராவிஸ் ஹெட் எப்போதும் போல் நன்றாக பேட்டிங் செய்து ஆரம்பம் முதலே அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அரையிறுதியிலும் அவரால் மீண்டும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். வீரர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள், அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள், எனவே இந்த தொடரில் நாங்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அல்லது இந்திய அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.