சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஃபெர்குசன் விளையாடுவது சந்தேகம்; சிக்கலை சந்திக்கும் நியூசி!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவது சந்தேகமாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், தென் ஆப்பிரிக்காவின் ஆன்ட்ரி நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
தற்சமயம் அந்த வரிசையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசனும் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் லோக்கி ஃபெர்குசன், துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து அவர் விலகினார். இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் ஃபெர்குசன் பங்கேற்பது தற்சமயம் சந்தேகமாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் முழு தகவலும் கிடைத்த பின் அவரால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடியுமா அல்லது மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை லோக்கி ஃபெர்குசன் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினால் அது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இருப்பினும் பாகிஸ்தான் முத்தரப்பு தொடருக்கான நியூசிலாந்து அணியில் லோக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக ஜேக்கப் டஃபி இடம்பிடித்திருப்பதால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் லோக்கி ஃபெர்குசன் விலகினால் அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தரப்பு தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, லோக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்