ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!

Updated: Tue, Mar 04 2025 10:48 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கூப்பர் கன்னொலிக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் அணியில் மாற்று தொடக்க வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் உள்ளார். இருப்பினும் அவரது சமீபத்தில் ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதனால் அவருக்கு லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. ஒருவேளை அவர் தேர்வு செய்யப்படாத பட்சத்தில் ஜோஷ் இங்கில்ஸ் அல்லது அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு தொடக்க வீரர் இடம் கிடைக்கும். 

இருப்பினும் அவர்கள் தொடக்க வீரர்கள் இடத்தில் களமிறங்கினால் அது மிடில் ஆர்டரில் பாதிப்பை ஏற்படுத்தும். மேற்கொண்டு கூப்பர் கன்னொலி மீது கூடுதல் ஆழுத்ததையும் அது உருவாக்கும். இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த அரையிறுதி போட்டியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தான் தொடக்க வீரராக காளமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஃபிரேசர் மெக்குர்க்கை நாம் நேரடியாக தொடக்க வீரர் இடத்தில் களமிறக்க முடியும். உண்மையைச் சொல்லப் போனால், நான் அப்படித்தான் செல்வேன், அவருக்கும் ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் இது போன்ற பெரிய ஆட்டங்களில், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்க அவருக்கு ஆதரவு கொடுத்து, ஒரு வாய்ப்பு கொடுத்தால், நிச்சயம் அவர் உங்களுக்காக ஒரு பெரிய ஆட்டத்தை வென்று கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

கடந்த ஆறு மாதங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் அவர் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம். எனவே, கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அவர் செய்தது போல், இந்த ஆட்டத்திலும் அவரால் ஏதாவது செய்ய முடியும். இல்லையெனில் அவர்கள் ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்கலாம். ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் அவர் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார் என்பதையும் மறுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை