CT 2025: ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக விளையாட வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!

Updated: Sat, Feb 15 2025 13:11 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர். 

இதில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடி வந்த மிட்செல் ஸ்டார்க்கும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் அவர்களுக்கு பதிலாக பென் துவார்ஷூயிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா மற்றும் சீன் அபோட் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கூப்பர் கன்னொலி ரிஸர்வ் வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அந்த அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியதுடன், படுதோல்வியைச் சந்தித்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும் அணியின் தொடக்க வீரர்களாக களமிறக்கபட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் ஆகியோர் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவதால், அணியின் தொடக்கமே பெரும் சருக்கலை சந்தித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இப்போதைக்கு இது ஒரு சவாலான விஷயம், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் ஏன் மாற்று வரிசையில் விளையாடினார் என்பது எனக்குப் புரியவில்லை. டிராவிஸ் ஹெட்டை பொறுத்தவரையில் அவர் தொடக்க வீரர் இடத்தில் புத்துணர்ச்சியுடனும், ஃபிட்டாகவும் இருக்கிறார். அதேசமயம் அவருடன் மேத்யூ ஷார்ட் விளையாடுவதும் சரியான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் தற்போதுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி வருவதுடன் அதில் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார். ஒருவேளை அவர் மிடில் ஆர்டரில் மிகவும் மதிப்புமிக்கவராக இருக்கலாம், இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தொடக்க வீரராக களமிறங்கினால் மேலும் பந்துகளை எதிர்கொள்வதுடன், அணிக்கு தேவையான ஸ்கோரையும் அவரால் குவிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை