இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் பதும் நிஷங்கா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கமிந்து மெண்டிஸும், 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜனித் லியானகேவும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்பான ஆட்டத்தாஇ வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் சரித் அசலங்கா அரைசதம் கடந்த நிலையில், துனித் வெல்லாலகே 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா 7 ரன்களிலும், மஹீஷ் தீக்ஷனா 2 ரன்னிலும் நடையைக் கட்ட இலங்கை அணி 150 ரன்களை எட்டுவதற்கு தடுமாறியது. அதன்பின் ஈஷான் மலிங்கா ஒருபக்கம் பந்தை தடுத்து விளையாட மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சரித் அசலங்கா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.

மேற்கொண்டு 8ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பாட்னர்ஷிப்பையும் உருவாக்கினார். இறுதியில் 14 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 127 ரன்களில் சரித் அசலங்கா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அசிதா ஃபெர்னாண்டோவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்ஸர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கும் 2 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய கூப்பர் கன்னொலி 3 ரன்களுக்கும், அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 31 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் லபுஷாக்னேவுடன் இணைந்த அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்த நிலையில் மார்னஸ் லபுஷாக்னே 15 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் கேரியும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிங்கிய வீரர்கள் ஆரோன் ஹார்டி 32 ரன்களையும், சீன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா உள்ளிட்டோர் தலா 20 ரன்களையும் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதனால் ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ, துனித் வெல்லாலகே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய சரித் அசலங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News