ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கான ஜெர்சியை வெளியிட்டது சிஎஸ்கே!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறும். சென்னையில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தொடருக்கான கோப்பையையும் ஜெர்சியையும் அறிமுகம் செய்துவைத்தார். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவாக இருக்கும்.
இத்தொடரின் தலைமை ஸ்பான்ஸராக சாய் ராம் கல்வி நிறுவனம் மற்றும் துணை ஸ்பான்ஸர்களாக இந்தியா சிமெண்ட்ஸ், ஃபிரேயர் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் செயல்படும். 86 அணிகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 2022-23 தொடரின் போட்டிகள் சென்னை, திருச்சி, விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் நடைபெறும்.
இதுகுறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்,"முதல் முறையாக 2012ல் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் 32 அணிகள் பங்குபெறும் தொடராக சென்னையில் நடைபெற்றது. அதில் தொடங்கி தற்போது தமிழ்நாடு முழுவதும் திறமைகளை கண்டறியும் தளமாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமாக நடைபெறாத தொடர் மீண்டும் நடைபெறுவது எங்களுக்கு பெருமகிழ்ச்சி.
தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட்டுக்கான அடித்தளத்தை மேம்படுத்த நாங்கள் வைத்திருக்கும் முக்கிய திட்டங்களுள் ஒன்று தான் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர். ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்களெல்லாம் இந்த தொடரில் விளையாடியவர்கள் தான். இந்தாண்டும் அதே போல் வருங்காலத்தில் நடச்சத்திர வீரர்களாய் கலக்கப் போகும் நிறைய பேர் கண்டறியப்படுவார்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், "தமிழ்நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்பு தான் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர். வீரர்கள் பெரிய கனவோடு இருக்க வேண்டும். தொடரில் சிறப்பாக செயல்பட்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெறுவதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். களத்தில் கடும் உழைப்பை போட்டு விளையாடுங்கள். ஆனால் அதே சமயம் எப்போதும் தோனி சொல்வது போல் நேர்மையாக, முகத்தில் சிரிப்புடன் விளையாடுங்கள். நீங்கள் சிறப்பாக விளையாட என் வாழ்த்துக்கள்" என்று கூறியுளார்.
தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி டிசம்பர் 26 முதல் ஜனவரி 10 வரை நாக்-அவுட் முறையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெறும். சென்னையில் இருந்து இரண்டு அணிகள் (முதல், இரண்டாம் இடம் பிடிப்பவர்கள்) மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆறு அணிகள் ஜனவரி 18 முதல் ஜனவரி 22 வரை திருநெல்வேலியில் நடைபெறும் தொடரின் இரண்டாம் பகுதியில் விளையாடுவார்கள். இறுதிப்போட்டி இரவில் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் போட்டிகளும் தொடரின் இரண்டாம் பகுதியும் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளப் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும். தேவையான பயணச்செலவுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் கவனித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.