மருத்துவரின் ஆலோசனையையும் மீறி தோனி விளையாடி வருகிறார் - சிஎஸ்கே நிர்வாகி!
தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ரவீந்திர் ஜடேஜா 43 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோ என இருவரும் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிட ஷஷாங் சிங் 27 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 28 ரன்களில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி 9ஆம் இடத்தில் களமிறங்கியதுடன், முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதன் காரணமாக ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் தோனி பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இல்லாத காரணத்தினாலே தோனி தொடர்ந்து விளையாடி வருவதாக சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, “கடந்த ஆண்டு காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த தோனி அதிலிருந்து இன்னுமு முழுமையாக குணமடைவில்லை. இதன் காரணமாகவே அவர் முன்னதாக களமிறங்குவதை தவிர்த்து, கடைசி சில ஓவர்களில் மட்டும் விளையாடி வருகிறார். அதிலும் அவர் முடிந்தவரை சிங்கிள்களை தவிர்த்து பெரிய ஷாட்டுகளை மட்டுமே விளையாடி வருகிறார்.
ஏற்கெனவே மருத்துவர்கள் தோனியை ஓய்வெடுக்கும் படி கூறிய நிலையில், டெவான் கான்வேவும் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாததால் தோனியால் ஓய்வெடுக்க முடியவில்லை. ஏனெனில் தோனி இல்லாத நிலையில் கான்வே விக்கெட் கீப்பராக செயல்பட்டிருப்பார். தற்போது தோனியை தவிர்த்து ஆரவெல்லி அவனேஷ் மட்டுமே விக்கெட் கீப்பிங் தேர்வுவாக உள்ளார். அவரும் இளம் வீரர் என்பதால் தோனி தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
பயிற்சியின் போது கூட தோனி ரன்னிங் பயிற்சி செய்வதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடைசி ஓவரில் பெரிய ஷாட்களை விளையாடி ரன்களை எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் பெரும்பாலும் சிக்ஸ் அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்குக் காரணம், அவர் இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லாததாலும், அணியில் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இல்லாததாலும், அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.