சேதன் சக்காரியாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியா. எளிய குடும்பத்தில் இருந்து வந்த சேதன் சகாரியா இந்த ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில், 5 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
அவரது இந்தச் செயல்பாடு பிடித்துப்போக 1.2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். இதையடுத்து ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பந்துவீச்சால் தோனி, டிவில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் தன்வசப்படுத்தினார்.
இந்நிலையில் சேதன் சக்காரியாவின் தந்தை காஞ்சிபாய், கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குஜராத்தின் பாவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு பாதிப்பு உள்ளது. காஞ்சிபாயின் உடல்நிலை மோசமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ஒரு நாள் முன்புதான் மருத்துவமனையில் சேதன் சகாரியா தனது தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சில மாதங்களுக்கு முன்பு, சேதன் சக்காரியாவின் சகோதரர் ராகுல் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார் என்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.