இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; அட்டவணையை அறிவித்த நியூசிலாந்து!

Updated: Tue, Apr 09 2024 13:27 IST
Image Source: Google

டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொடரை நடத்தி வருகிறது. இதில் இதுவரை இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளன. 

இந்நிலையில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் 2023-2025ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் முன்னேற அனைத்து அணிகளும் திவிரமாக தயாராகி வருகின்றன. 

அந்தவகையில் இங்கிலாந்து அணி வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிராகவும் தலா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதையடுத்து அந்த அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 07ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 15ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இத்தொடர் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை