ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன.
இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார்.
மேற்கொண்டு ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்கதேச ராணுவம் பொறுப்பை ஏற்று கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேற்கொண்டு நாடு முழுவதும் இயல்பு நிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேசமயம் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது.
வங்கதேசத்தில் வன்முறை குறைந்து இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே அங்கு டி20 உலக கோப்பை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தொடரை அங்கு நடத்த முடியாத நிலையில் ஐசிசி வேறுநாட்டு தொடரை மாற்றுவது குறித்த ஆலோசனையில் இறங்கிவுள்ளது. இத்தொடர் வேறுநாட்டுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டால், அதனை இந்தியா, இலங்கை அல்லது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அப்போடி தொடர் வேறுநாட்டுக்கு மாறும் பட்சத்தில் அதற்கு இந்தியா முதல் தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், வங்கதேச பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் ஐசிசி பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஒருங்கிணைந்து வங்கதேசத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை ஐசிசி உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இறுதிமுடிவு ஓரிரு வாரங்களில் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.