அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் - ஐடன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அந்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டபஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். பின் மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கோ ஜான்சன் 29 ரன்களைச் சேர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம், “நேர்மையாக கூற வேண்டும் எனில் இருப்பது மிகவும் கடினம். நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முற்றிலுமாக சொதப்பிவிட்டோம். இப்போட்டிக்கான அனைத்து கிரெடிட்டையும் எதிரணிக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர், நாங்கள் திரும்பி வருவது கடினமாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இப்பொழுதெல்லாம் ஸ்டெம்பை நோக்கி மட்டும் பந்து வீசினால் போதாது. கொஞ்சம் வைடு லைனிலும் பந்து வீச வேண்டும். அதில் ஒன்று அல்லது இரண்டு பந்துகள் நம் கட்டுப்பாட்டை மீறி செல்லலாம், இருப்பினும் அது வீரர்னின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் 2026ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குள் சிறந்த அணியாக ஒன்றிணைவோம். ஒரு வெள்ளைப்பந்து அணியாக நாங்கள் சரியான விஷயங்களில் ஈடுபட்டு சிறந்த வீரர்களைக் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.