‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’- ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர்; வைரல் காணொளி!

Updated: Fri, Oct 20 2023 21:43 IST
Image Source: Google

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டத்தில் மைதானத்தில் நடைபெறும் சம்பவங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகின்றன. அண்மையில் அஹ்மதாபாத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் மத ரீதியான முழக்கங்கள் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக ஐசிசியிடம் யும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்தப் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் 50 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வந்தது. அப்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அமர்ந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி வந்தார். அப்போது அங்கு வந்த காவலர் மைதானத்தில் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும்தான் எழுப்ப வேண்டும்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். இதனால் கடுப்பான அந்த ரசிகர் அந்த காவலரிடம் வாக்குவாதம் செய்தார். பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதும் போது நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பாமல் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களையா எழுப்ப முடியும் என அந்த ரசிகர் கேட்டார்.

அதற்கு அந்த காவலர் இந்தியாவுக்கு ஆதரவாக எந்த முழக்கங்களை வேண்டுமானாலும் எழுப்பலாம் ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்று கூறினார். இதற்கு அந்த ரசிகர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போட்டி அமைப்பாளர்கள் அங்கிருந்து வந்து அந்த ரசிகரை சமாதானப்படுத்தினர். காவலரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் இக்கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை