ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். அதன்பின் களமிறங்கிய விரர்களில் ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

Advertisement

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றியும், டேரில் மிட்செல் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஹானே 33 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 61 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் இறுதிவரை போராடிய மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களை சேர்த்த போதும், சிஎஸ்கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இதையடுத்து இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இது பேட்டிங் செய்வதற்கு சிறப்பான விக்கெட் என்று நினைக்கிறேன். அதனால் இந்த மைதானத்தில் 200 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்ததின் காரணமாக எங்களால் இந்த இலக்கை எட்டமுடியவில்லை.

Advertisement

அதுமட்டுமின்றி எங்களது வீரர்களில் சிலர் காயம் கரணமாகவும், இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் நாட்டிற்காக விளையாட சென்றதும், டெவான் கான்வே போன்ற தொடக்க வீரார் இல்லாததுமே எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டும் நாங்கள் இதே நிலைமையில் இருந்துள்ளோம். அப்போது எங்கள் வெற்றிக்கு இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அன்று எங்களால் அதனை அடைய முடிந்தது. ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை. 

என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட மைல்கற்கள் உண்மையில் முக்கியமில்லை, எல்லாவற்றுக்கும் பிறகு இறுதி இலக்கு வெற்றியே. நீங்கள் அங்கு வரவில்லை என்றால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தான் வழங்கும். ஒரு சீசனில் நீங்கள் 100 ரன்கள் எடுத்தாலும் அல்லது 500-600 ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் அது உங்கள் வெற்றிக்கு உதவில்லை எனில் அந்த ரன்களால் எந்த பயனும் கிடையாது. இத்தோல்வி எனக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News