நேரடியாக களத்தில் இறங்கிய ஹனுமா விஹாரி; குவியும் பாராட்டுகள்!
இந்தியாவில் கரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கு பொதுமக்கள் தினம் தினம் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதற்காக கிரிக்கெட் பிரபலங்கள், வீரர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணி வீரர் ஹனுமா விஹாரி நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
ஹனுமா விஹாரி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் பங்கேற்றுள்ளார். வெகு தொலைவில் இருந்தாலும், தன் தாய் நாடு படும் அவலத்தை பார்த்த அவர், அங்கிருந்து கொண்டே சமூக சேவையில் இறங்கியுள்ளார். இதற்காக ட்விட்டரை தனது கருவியாக பயன்படுத்தியுள்ளார்.
அதன் படி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து 100 பேர் கொண்ட தன்னார்வ குழு ஒன்றை அமைத்துள்ள அவர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், பிளாஸ்மாக்கள், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார். தொலைபேசி மூலம் அனைத்து விஷயங்களை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ஹனுமா விஹாரி,“நான் என்னை புகழ்ந்து கொள்ள விரும்பவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதே எனது நோக்கம். இதற்காக உதவி உள்ளம் படைத்த 100 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கினேன். எங்களுக்கு வாட்ஸ் அப்பில் குழு உள்ளது. அதன் மூலம் முடிந்தவரை மக்களுக்கு உதவி புரிய கடுமையாக உழைத்து வருகின்றனர். தனியாளாக இந்த முயற்சியை கையில் எடுத்தேன் தற்போது பல துறைகளில் இருந்தும் எனக்கு உறுதுணையாக வந்து நின்றுள்ளனர். இது வெறும் தொடக்கம்தான்.
இந்த கரோனா 2ஆவது அலை மிகவும் பலமானதாக உள்ளது. மருத்துவமனை படுக்கை கிடைப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் உதவிகளை செய்வதே எனது குறிக்கோள். எதிர்காலத்திலும் இதனை தொடர்ந்து செய்வேன்” என தெரிவித்துள்ளார்.