இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கரோனா உறுதி!
உலகம் முழுவது கரோனா வைரஸ் தொற்றால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு, அதில் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இத்தொற்று பரவு அபாயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
அதேசமயம் தொற்று பரவும் அபாயம் காரணமாக விளையாட்டு போட்டிகளும் கிட்டத்திட்ட 6 மாதங்கள் முற்றிலுமாக முடங்கின. இந்நிலையில் தற்போது தான் தொற்றின் தாக்கம் குறைந்து விளையாட்டுப் போட்டிகள் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து வருகின்றது.
இதற்கிடையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் பரவத்தொடங்கியுள்ள ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் மீண்டும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவிட்-19 வைரஸை விட பல மடங்கு வேகமாக பரவும் என கணிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் தற்போது விளையாட்டு போட்டிகளுக்கு மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட ஜிம்பாப்வே சென்றுள்ள இலங்கை மகளிர் அணியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகளுக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. மேலும் வீராங்கனைகள் உறுமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் எந்தெந்த வீராங்கனைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.