சிபிஎல் 2023: அலிக் அதனாஸ் அதிரடியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி அபார வெற்றி!

Updated: Fri, Sep 01 2023 11:59 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கி ஜமைக்கா தலாவாஸ் அணி பிராண்டன் கிங் ஒரு ரன்னிலும், அல்கெஸ் ஹேல்ஸ் 12 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸி 7 ரன்களுக்கும், ரெய்ஃபெர் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஷமாரா ப்ரூக்ஸ் - இமாத் வசிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமாரா ப்ரூக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 78 ரன்களில் ப்ரூக்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாத் வாசிமும் 33 ரன்களுக்கு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் ஜமைக்கா தலாவாஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்போடாஸ் அணியில் ரக்கீம் கார்ன்வால் 17 ரன்களுக்கும், கைல் மேயர்ஸ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த லௌரி எவான்ஸ் - அலிக் அதானாஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் லௌரி எவான்ஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அலிக் அதானாஸ் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். இறுதியில் ரோவ்மன் பாவெல் - ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியாக செயல்பட்ட அலிக் அதனாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை