சிபிஎல் 2023: பேட்ரியாட்ஸை பந்தாடி அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Sep 02 2023 23:00 IST
சிபிஎல் 2023: பேட்ரியாட்ஸை பந்தாடி அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை எதிர்த்து செயிண்ட் கிட்ஸ் & நேவிட்ஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கயானா அணிக்கு சைம் அயுப் - ஹஸ்ரதுல்லா ஸஸாய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் 7 ரன்களுக்கும், சைம் அயுப் 21 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 13 ரன்களுக்கும், அஸாம் கான் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் - கிமோ பால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிவந்த ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 36 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய டுவைன் பிரிட்டோரியஸும் தனது பங்கிற்கு 27 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கீமோ பால் 41 ரன்களையும், ரொமாரியோ செஃபெர்ட் 7 பந்துகளில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஒஷேன் தாமஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் எவின் லூயிஸ் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய வில் ஸ்மீத் 2 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபிளெட்சரும் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதையடுத்து களமிறங்கிய ஜார்ஜ் லிண்டே 13, ரூதர்ஃபோர்ட் 2 ரன்களுக்கும், கார்பின் போஷ்க் 27 ரன்களுக்கும், யானிக் கரியா 13 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அணியின் டெய்ல் எண்டர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். கயானா அமேசன் வாரியர்ஸ் அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் 3 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனால் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை