சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!

Updated: Mon, Sep 25 2023 09:45 IST
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய நைட் ரைடார்ஸ் அணிக்கு வால்டன் - மார்க் தயால் தொடக்கம் கொடுத்தனர். இதில் வால்டன் 10 ரன்களுக்கும், மார்க் தயால் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய கேசி கார்டி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாக்குப்பிடித்தார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அதிரடி வீரர்கள் கீரென் பொல்லார்ட், அகீல் ஹொசைன், ஆண்ட்ரே ரஸல், டுவைன் பிராவோ, சுனில் நரைன், அலிகான் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதானம் காட்டிய கேசி கார்டியும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் நைட்ரைடர்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்தது. வாரியர்ஸ் தரப்பில் பிரிட்டோரியஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வாரியர்ஸ் அணிக்கு சைம் அயுப் - கீமோ பால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கீமோ பால் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அயுப்புடன் இணைந்த ஷாய் ஹோப்பும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன் தனது அரைசதத்தையும் கடந்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சைம் அயூப் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 52 ரன்களையும், ஷாய் ஹோப் 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி முதல் முறையாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டுவைன் பிரிட்டோரியஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஷாய் ஹோப் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.     

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை