சிபிஎல் 2024: கார்ன்வால் அபார பந்துவீச்சு; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ் 6 ரன்னிலும், கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், ரைலீ ரூஸோவ் 9 ரன்களிலும், மைக்கைல் லூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதற்கிடையில் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜோஷுவா டா சில்வா 25 ரன்களையும், ஆன்ரிச் நோர்ட்ஜே 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ரக்கீம் கார்ன்வாலின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பேட்ரியாட்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரக்கீம் கார்ன்வால் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு துணையாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், ஒபேத் மெக்காய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் கதீம் அலீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் கதீம் 25 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய அலிக் அதானாஸ் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 11.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரக்கீம் கார்ன்வால் தேர்வு செய்யப்பட்டார்.