சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!

Updated: Thu, Sep 12 2024 09:31 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜஸ்டீன் கிரீவ்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 55 ரன்களைச் சேர்த்தனர். 

அதன்பின் பிராண்டன் கிங் 27 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அபாரமாக விளையாடி வந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அபாரமாக விளையாடிய சாம் பில்லிங்ஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் பில்லிங்ஸ் ஆட்டமிழ்கக, அடுத்து வந்த ஃபேஃபியன் ஆலன், கிறிஸ் கிரீன், பிரிமஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

ஆனால் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - ரக்கீம் கார்ன்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதைல் ரக்கீம் கார்ன்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் டி காக்குடன் இணைந்த அலிக் அதானாஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக்  அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 3 பவுண்ட்ரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களை எடுத்த நிலையில் அலிக் ஆதானாஸும் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - டேவிட் மில்லர் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 127 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆன்டிகுமா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ராயல்ஸ் அணியைச் சேர்ந்த் குயின்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை