சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!

Updated: Sat, Aug 31 2024 10:07 IST
Image Source: Google

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் டெடி பிஷப் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - கோஃபி ஜேம்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஃபி ஜேம்ஸ் 37 ரன்களிலும், ஃபகர் ஸமான் 40 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜூவல் ஆண்ட்ரூ 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய இமாத் வசீம் அதிரடியாக விளையாடியதுடன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - குடகேஷ் மோட்டி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குடகேஷ் மோட்டி 6 ரன்களிலும், அதிரடியாக தொடங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 19 ரன்களிலும், அசாம் கான் 9 ரன்களிலும், கீமோ பால் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற ரொமாரியோ ஷெஃபர்ட் 4 சிக்ஸர்களை விளாசி 32 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் கயானா அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆல் ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் கடைசி ஓவரை எதிர்கொண்டார். 

Also Read: Funding To Save Test Cricket

முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளையும், கடைசி பந்தில் சிக்ஸரையும் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக குடகேஷ் மோட்டி தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை