சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கோஃபி ஜேம்ஸ் 10, ஃபகர் ஸமான் 17, சாம் பில்லிங்ஸ் 08, இமாத் வாசிம் 2 மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த ஜுவெல் ஆண்ட்ரூ - கேப்டன் கிறிஸ் கிரீன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் கிறிஸ் கிரீன் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஜுவெல் அண்ட்ரூ 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராயல்ஸ் அணி தரப்பில் ஒபேத் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா,ஜேசன் ஜோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - ரகீம் கார்ன்வால் இணை முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ரகீம் கார்ன்வால் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 34 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஷமார் ப்ரூக்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அத்துடன் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 45 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களையும், ஷமார் ப்ரூக்ஸ் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சிபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.