சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ்!
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில், மறுமுனையில் கேப்டன் டூ பிளெசிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சார்லஸுடன் இணைந்த அகீம் அகஸ்டேவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அகீம் அகஸ்டேவும் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடியதுடன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 45 ரன்களைக் குவிக்க, லூசியா கிங்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. ராயல்ஸ் தரப்பில் தீக்ஷனா, மஹாராஜ், நயீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் காதீம் அலின் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 22 ரன்கள் எடுத்த நிலையில் டி காக் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்கீம் கார்ன்வாலும் 3 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். மேற்கொண்டு தொடக்க வீரராக களமிறங்கிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கதீம் அலீன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களில் டேவுட் மில்லர் 21 ரன்களையும், அலிக் அதானாஸ் 19 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்ததுடன் 149 ரன்களை மட்டுமே எடுத்தது. கிங்ஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், நூர் அஹ்மத், டேவிட் வைஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.