டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!

Updated: Fri, Aug 05 2022 20:04 IST
Image Source: Google

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கடந்த 2005இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒருசில வருடங்களிலேயே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முதுகெலும்பு வீரராக விளையாடினார். அதிரடியாக பேட்டிங் திறமை பெற்ற அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 

கடந்த 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரராக விளையாடிய அவர் டாப் ஆர்டர் சரிந்த எத்தனையோ போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போட்டால் அதை பிரிக்கும் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்த பெருமைக்குரியவர்.

குறிப்பாக கடந்த 2011 உலக கோப்பையில் காலிறுதி மற்றும் அரையிறுதி போன்ற அழுத்தமான நாக்-அவுட் போட்டிகளில் அவர் அடித்த கணிசமான ரன்கள் தான் இந்தியா 28 வருடங்கள் கழித்து உலககோப்பையை வெல்ல முக்கிய காரணம் என்று அப்போதிருந்த பயிற்சியாளர் கேரி க்ரிஸ்டன் பாராட்டியிருந்தார். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் தமிழகத்தின் தலை நகரை மையமாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அசால்டாக பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்டு ஏராளமான ரன்களை குவித்தார்.

அதிலும் கேப்டன் தோனி 4 கோப்பையை வெல்வதற்கு தளபதியாக செயல்பட்ட இவர் ஏராளமான சாதனைகளையும் 2018 வரை அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் முதலிடத்தில் இருந்தார். அதனால் மிஸ்டர் ஐபிஎல் என்று வல்லுனர்கள் போற்றும் இவரை பல வருடங்களாக சென்னையில் விளையாடி தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்ததால் தமிழக ரசிகர்கள் தோனிக்கு அடுத்தபடியாக சின்னத்தல என்று கொண்டாடுகிறார்கள்.

இருப்பினும் 2019க்குப்பின் வீழ்ச்சியை சந்தித்த அவர் கடந்த 2020 சுதந்திர தினத்தில் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றபோது நட்புக்கு இலக்கணமாக தாமும் ஓய்வு பெறுவதாக 33 வயதிலேயே அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவரை சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறினார் என்பதற்காக சென்னை அணி நிர்வாகம் இந்த வருடம் கழற்றி விட்டது ரசிகர்களை கோபப்படுத்தியது. இருப்பினும் அதற்காக மனம் தளராத அவர் நிதர்சனத்தை புரிந்து கொண்டு வர்ணனையாளராக அவதாரம் எடுத்து தனது வாழ்வின் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்காக 7000-க்கும் மேற்பட்ட ரன்களையும் ஐபிஎல் தொடரில் 5000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து பல இளம் வீரர்களுக்கு உத்வேகமாக திகழும் அவரை பாராட்டும் வகையில் தமிழகத்தின் பிரபல வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

அறிவிக்கப்பட்டபடி இன்று வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரவி அவர்களின் கையால் சுரேஷ் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதைப் பெற்ற சுரேஷ் ரெய்னா சென்னை எப்போதுமே என்னுடைய வீடு, எனது மனதில் சென்னைக்கும் தமிழக மக்களுக்கும் எப்போதும் தனி இடம் உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டால் தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த சுரேஷ் ரெய்னா தற்போது தமிழகத்தின் ஒரு பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் சென்னை அணி நிர்வாகம் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை