நான் பந்துவீசியது இவர்கள் மூவர் தான் சிறந்தவர்கள் - ஆலன் டொனால்ட்!

Updated: Fri, Apr 08 2022 22:51 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட். 1991ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆலன் டொனால்ட், 2003 ஒருநாள் உலக கோப்பை வரை ஆடினார்.

அந்த குறிப்பிட்ட உலக கோப்பை தொடரில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் ஓய்வை அறிவித்தார் ஆலன் டொனால்ட்.

இதுவரை 72 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளையும், 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 272 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஆலன் டொனால்ட், அவரது கிரிக்கெட் கெரியரில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, அசாருதீன், ஸ்டீவ் வாக், ஸ்டீஃபன் ஃப்ளெமிங், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ளார்.

இந்நிலையில் தன் கெரியரில் தான் பந்துவீசியதிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆலன் டொனால்ட், “டெக்னிக்கலாக சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். உள்நாடு அல்லது வெளிநாடு என எங்கு ஆடினாலும் அபாரமாக ஆடுவார். தென் ஆப்பிரிக்காவில் வந்து சச்சின் ஆடியபோது பவுன்ஸ் பிட்ச்சுக்கு தகுந்தாற்போல் டெக்னிக்கை மாற்றிக்கொள்வார். 

பந்துகளை விடுவதிலும் சிறப்பாக செயல்படுவார். இந்தியாவில் ஆடும்போது லோயர் பவுன்ஸுக்கு ஏற்றவாறு டெக்னிக்கை மாற்றிக்கொள்வார். அதனால் தான் சச்சின் அனைத்து கண்டிஷன்களிலும் அனைத்து நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார்.

சச்சினுக்கு அடுத்து சிறந்த பேட்ஸ்மேன் என்றால் ஜீனியஸ் ஷாட் மேக்கர் பிரயன் லாரா. நல்ல பந்துகளை கூட பவுண்டரிக்கு விரட்டுவார். அடுத்தது இங்கிலாந்து வீரர் மைக்கேல் அதெர்டன்” என்று டொனால்ட் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை