அசுர வேகத்தில் பந்துவீசும் ஆடம் மில்னே; ஆச்சரியத்தில் பாலாஜி!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு வாரங்களாக சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி, மீண்டும் பழைய வீரர்களைதான் வாங்க முயற்சி செய்தது. அதன்படி அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹார் போன்றவர்களை வாங்கியது. இருப்பினும், ஷர்தூல் தாகூர் போன்ற சிலரை வாங்க முடியவில்லை.
இதனால், புது லெவனை அணியை கட்டமைக்க வேண்டிய இடத்தில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி, தலைமை பயிற்சியாளர்கள் ஸ்டீபன் பிளெமிங், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் இருக்கிறார்கள். இதனால், பயிற்சியில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்காணித்து, அவர்களில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கு லெவன் அணியில் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தற்போது முதல் பாதி ஆட்டங்களில் தீபக் சஹார் பங்கேற்க மாட்டார் என்பதால், தரமான பந்துவீச்சு துறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி இருக்கிறார். இதற்காக ராஜ்வர்தன் ஹர்கர்கர், ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், முகமது ஆஷிப், ஷிவம் துபே ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சி செய்யும் விதத்தை பாலாஜி கூர்ந்து கவனத்து வருகிறார்.
அப்போது ஆடம் மில்னே முதல் சில நாட்களில் வேகம் குறைவாக பந்துவீசிய நிலையில், அடுத்து திடீரென்று அசுர வேகத்தில், அதாவது 145+ வேகத்தில் தொடர்ந்து பந்துவீச ஆரம்பித்து, பாலாஜியை பிரமிக்க வைத்தாராம். மேலும் பவுன்சர் வீசுவது, யார்க்கர் வீசுவது, ஸ்லோ பால் வாசுவது போன்றவற்றிலும் துல்லியமாக செயல்பட்டாராம்.
இதனால், தீபக் சஹார் வருவதற்கு முன்புவரை ஆடம் மில்னே, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கர் ஆகியோரை வைத்து விளையாட சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆடம் மில்னே மின்னல் வேகத்தில் பந்துவீசி பாலாஜியை பிரமிக்க வைத்ததை, காணொளி மீம்ஸ் மூலம் சிஎஸ்கே நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளது. அதில், ஆடம் மில்னே பந்துவீச ஓடுவதை பார்த்து, பாலாஜி அதிர்ச்சியில் உரைந்ததுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.