முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவை 130 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
SA vs NZ: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை 134 ரன்களில் சுருட்டியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வேன்டர் டுசென் 14 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ருபின் ஹர்மான் 10 ரன்களுக்கும், டெவால்ட் பிரீவிஸ் 10 ரன்களுக்கும், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். மேற்கொண்டு ஆண்டில் சிமலேனும் 11 ரன்களுடன் நடையைக் கட்ட, நிதானமாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் ஜார்ஜ் லிண்டே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களையும், பீட்டர் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மிட்செல் சான்ட்னர் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.