சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து சிஎஸ்கே சிஇஓ கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் முன்னணி வீரராக திகழ்ந்து வந்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் கடந்த சீசனில் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது ரெய்னாவை வாங்குவதற்கு துளி கூட சிஎஸ்கே ஆர்வம் காட்டவில்லை. ஏலம் போகாமல் வர்ணனையாளராக செயல்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே ஜெர்ஸியில் பயிற்சி மேற்கொண்டு வந்ததால், அடுத்த சீசனிலாவது சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் விடை பெற்றுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதங்களை உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ-க்கு அனுப்பி வைத்துள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே அயல்நாட்டு தொடர்களில் பங்கேற்க முடியும். இதற்காக தான் ரெய்னா தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அடுத்ததாக அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் அமீரக டி20 தொடர்களில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரெய்னாவின் ஓய்வு குறித்து சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில், “ரெய்னா தனது ஓய்வு முடிவை 2 நாட்களுக்கு முன்னதாகவே எங்களுக்கு கூறிவிட்டார். அவரின் முடிவை நாங்கள் மதித்து வாழ்த்து கூறினோம். கடந்த 10 ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்கு நிறைய விஷயங்களை செய்துள்ள ரெய்னா என்றுமே சிஎஸ்கேவின் ஒரு அங்கமாக தான் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்..
ஐபிஎல் தொடரில் ஜாம்பவானாக திகழும் ரெய்னா இதுவரை 200 இன்னிங்ஸ்களில் விளையாடி 5,528 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.