ஐபிஎல் 2022: ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை சந்திக்கும் சிஎஸ்கே!

Updated: Wed, Mar 23 2022 13:00 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் தொடரின் முதல் போட்டி வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 ) நடைபெறவுள்ளது. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதிய சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் தான் இந்தாண்டின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக கூட இருக்கலாம். தனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட போதும், கரோனா அதனை நிறைவேற விடவில்லை. இதனால் இந்தாண்டு சிஎஸ்கேவுக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துவிட்டு, தோனி வெளியேறுவார் எனத்தெரிகிறது.

இந்த சூழலில் தான் சிஎஸ்கேவுக்கு தொடக்கமே பின்னடைவாக சென்றது. தீபக் சஹார் மீது அதீத நம்பிக்கை வைத்து ரூ.14 கோடிக்கு எடுக்கச்சொன்னார் தோனி. ஆனால் காயம் காரணமாக அவரால் முதல் பாதி தொடரில் விளையாட முடியாது என அறிவிப்பு வெளியானது. கடந்த 2 சீசனாக பவர் ப்ளேவில் மட்டும் 32 விக்கெட்களை எடுத்து, எந்த பவுலரும் நெருங்க முடியாத உச்சத்தில் சஹார் உள்ளார். அவருக்கு மாற்று வீரரை முதலில் தேடினார்.

அணியில் ஷர்துல் தாக்கூர் இல்லை. எனவே மும்பை களத்தில் நல்ல வேகமாக பந்துவீசக்கூடிய பவுலராக தென் ஆப்பிரிக்க வீரர் டுவைன் பிரிட்டோரியஸை தேர்வு செய்தார். ப்ளேயிங் லெவனிலும் அவரை வைத்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழலில் தான், பிரிட்டோரியஸ் இன்னும் இந்தியா வரவில்லை. வங்கதேசத்துடனான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதனை முடித்துவிட்டு நாளைய தினம் பிரிட்டோரியஸ் இந்தியா வந்தாலும், 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனால் அவரால் மார்ச் 26இல் நடைபெறும் கொல்கத்தாவுடனான முதல் லீக் போட்டியில் பங்கேற்க முடியாது.

பல குழப்பங்களுக்கு இடையே ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கேவுக்கு வந்துவிட்டார். ஆனால் தோனியின் நம்பிக்கை நாயகன் மொயீன் அலி வரவில்லை. விசா பிரச்சினை காரணமாக அவர் தாமதமாக தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். மிடில் ஆர்டரில் தூணாக இருந்த மொயீன் அலி இருப்பதால், தோனிக்கு மற்றொரு சிக்கல் உருவாகியுள்ளது.

டாப் ஆர்டரில் மொயீன் அலிக்கு மாற்றாக ராபின் உத்தப்பா களமிறக்கப்படலாம். தீபக் சஹாருக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சஹாரின் அளவிற்கு பவர் ப்ளேவில் விக்கெட் எடுப்பது கடினம் தான். பிரிட்டோரியஸின் இடத்திற்கு வேறு வழியின்றி கிறிஸ் ஜோர்டனை தோனி களமிறக்குவார் எனத்தெரிகிறது. 

இந்திய களத்தில் ஜோர்டன் எப்படி செயல்படப்போகிறார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. எனினும் இவர்களை வைத்து தோனி எப்படியும் வெற்றி பெறுவார் என்ற ரசிகர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை