ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் துபாயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் காம்மின்ஸ் ஆகியோர் உட்சபட்ச விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அவர்களைத் தவிர்த்து நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் மிக முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரு சீசன்கள் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியதுடன் அந்த அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது. இதனல் காரணமாக இத்தொடரின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனால் எழுந்துவரும் குழப்பங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடரின் முதன் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார். மேலும் இத்தொடருக்கான முதல் 15 நாள்களுக்கான தற்காலிக அட்டவணை இன்று அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.