ஐபிஎல் 2022: என் கடின காலங்களை நான் மறக்கவில்லை - மொயின் அலி

Updated: Tue, May 17 2022 19:39 IST
CSK's Moeen Ali survived on bread and cucumber to play county matches, says 'could not afford food' (Image Source: Google)

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மொயின் அலி. அவரது பூர்வீகம் பாகிஸ்தான் தான். அவருடைய தாத்தா, தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு வேலைக்காக வந்துள்ளார். மொயின் அலி பிறந்தது இங்கிலாந்தில் தான். வெளிநாட்டில் நம் மக்கள் என்ன கஷ்டப்படுவார்களோ, அத்தனை கஷ்டமும் மொயின் அலி பட்டுள்ளார்

மொயின் அலியின் தந்தை முனிர் அலி மனநல மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்துள்ளார். முனிர் அலிக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவு பிரியமாம். அதற்காக தன் குழந்தைகளிடம் கிரிக்கெட் வீரராக முயற்சி செய்யும் படி கூறியுள்ளார். தொழில் முறை கிரிக்கெட் ஆக வேண்டும் என்றால், அதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகம். இதனால் மொயின் அலியின் தந்தை பகுதி நேரமாக காரும் ஓட்டியுள்ளார்.

இது குறித்து சிஎஸ்கேவின் நேர்காணலில் பேசிய மொயின் அலி, “நான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு என் தந்தை தான் காரணம். அவரது ஆசையை எங்கள் மீது திணிக்கவில்லை. இப்படி செய்தால் நல்ல நிலைக்கு வரலாம் என்று வழி மட்டும் காட்டினார். 13 வயதில் இருந்து 15 வரை கிரிக்கெட்டிற்காக கடினமாக உழைத்தால் நிச்சயம் ஜெய்க்க முடியும் என்று கூறினார்.

அதே போல் எங்களை தினமும் மைதானத்துக்கு அழைத்து செல்வார். பணியை முடித்த பிறகு எங்களுக்கு பயிற்சியும் கொடுப்பார். எங்களிடம் அவ்வளவு பணம் இருக்காது. கையில் ஒரு பவுண்ட் மட்டும் தான் இருக்கும். அதை வைத்து தான் குடும்பத்தை ஓட்டுவோம். எங்களுக்கு சாப்பிட உணவு இருக்காது. வெறும் வெள்ளேரி காய் மற்றும் பிரேட்களை தான் சாப்பிட்டு கிரிக்கெட் விளையாடுவோம்.

ஒரு முறை நான் அணி தேர்வுக்கு செல்ல இருந்தேன். அப்போது என்னிடம் கிரிக்கெட் உபகரணங்கள் கிடையாது. தந்தை தனது நண்பனின் மகனிடம் உள்ள உபகரணங்களை வாங்கி கொடுத்தார். அதை வைத்து தான் அணி தேர்வுக்கு சென்றேன். மற்றவர்களை விட அதிகம் உழைக்க வேண்டும் என்று பயிற்சி செய்வேன். இப்போது நான் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் என் கடின காலங்களை நான் மறக்கவில்லை” என்று உருக்கத்துடன் பதிவுசெய்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை