சாம்பியன்ஸ் கோப்பை 2025: வில்லியம்சன், ரவீந்திரா அபார சதம; தென் ஆப்பிரிக்காவுக்கு 363 டார்கெட்!

Updated: Wed, Mar 05 2025 18:19 IST
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வில்லியம்சன், ரவீந்திரா அபார சதம; தென் ஆப்பிரிக்காவுக்கு 363 டார்கெட்!
Image Source: Google

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்த கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 108 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் கேன் வில்லியம்சனும் தனது சதத்தைப் பூர்த்தி செய்திருந்த நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 102 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய டாம் லேதம் 4 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலீப்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய டேரில் மிட்செல் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இறுதியில் கிளென் பிலீப்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை இமாலய இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை